ரூ.3,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
திருநின்றவூர்:தற்காலிக மின் இணைப்பு வழங்க, 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டார். ஆவடியை சேர்ந்தவர் சங்கர், 36; மத்திய அரசு ஊழியர். இவர், பாலவேடு, ஏ.என்.எஸ்., நகரில் உள்ள தன் நிலத்தில், வீடு கட்டுவதற்கு, தற்காலிக மின் இணைப்பு பெற திருநின்றவூர் துணை மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அதற்கான கட்டணம், 5,525 ரூபாயையும் ஆக., 29ம் தேதி கட்டியுள்ளார். அதன்படி, செப்., 13ம் தேதி நிலத்தை ஆய்வு செய்த மின்வாரிய வணிக ஆய்வாளர் ரஜினி, 41 என்பவர், மின் இணைப்பு வழங்க 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு செப்., 23ம் தேதி சங்கர் புகார் அளித்தார். மறுநாள் வேலை நிமித்தமாக சங்கர் டில்லிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த செப்., 26ம் தேதி, சங்கரின் நிலத்திற்கு, தற்காலிக மின் இணைப்பு வழங்கிய ரஜினி, லஞ்ச தொகை கேட்டு நச்சரித்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த சங்கர், டில்லியில் இருந்து திரும்பிய நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை அறிவுறுத்தலின்படி, கோமதிபுரத்தில் உள்ள திருநின்றவூர் துணை மின் வாரிய அலுவலகத்தில், ரசாயனம் தடவிய 3,000 ரூபாயை, ரஜினியிடம் நேற்று வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., கணேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரஜினியை கையும் களவுமாக கைது செய்தனர்.