பொன்னேரியில் 23ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
திருவள்ளூர்; பொன்னேரி அரசு கலை கல்லுாரியில், வரும் 23ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நேற்று துவங்கியது. கலெக்டர் பிரதாப் விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வைத்து கூறியதாவது:திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, வரும் 23ம் தேதி பொன்னேரி அரசினர் கலை கல்லுாரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துகிறது.திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப உள்ளன.முகாமில் 8, 10, மற்றும் பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் டிப்ளமா, பொறியியல், நர்சிங் படித்தவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ள இளைஞர்கள் www.triprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.