முதல்வர் திறப்பு விழாவிற்காக தயார் நிலையில் அரசு கட்டடங்கள்
திருவள்ளூர்:தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக சென்று, பயனுள்ளதாக உள்ளதா என்பதை அறிய, ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வின் போது, தமிழக அரசின் முன்னோடி திட்டங்கள் குறித்த விபரம், அவற்றின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.பின், அரசு சார்பில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவியையும் வழங்கி வருகிறார். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில், முதல்வர் பங்கேற்கும் கள ஆய்வு, வரும் 19ம் தேதி பொன்னேரி வட்டம், ஆண்டார்குப்பம் கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.அன்றைய தினம், ஒரு லட்சம் பேருக்காவது நலத்திட்ட உதவி வழங்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதற்காக, மாவட்டத்தில் நடைபெறும் பாலம், கால்வாய், சென்னை நகரை ஒட்டியுள்ள 'பெல்ட்' ஏரியாவில் புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவியை வழங்க, கலெக்டர் பிரதாப் தினமும் அதிரடி ஆய்வு நடத்தி வருகிறார். பல நாட்களாக முடிக்கப்படாத பணிகளை, வரும் 15ம் தேதிக்குள் நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களும், அன்றைய தினம் திறந்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக, திருவள்ளூர் நகராட்சி, ராஜம்பாள் தேவி பூங்காவில், 16 கடைகள் கொண்ட வணிக வளாகம், வெள்ளியூர் கால்நடை மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் ஆரம்ப துணை சுகாதார நிலைய வளாகத்தில் மருத்துவ ஆய்வகம் உள்ளிட்ட கட்டடங்களும் திறப்பு விழாவிற்காக தயாராக உள்ளன.