மளிகை கடை, கோவில் பூட்டை உடைத்து திருட்டு
பொன்னேரி:பொன்னேரி அருகே உள்ள திருவாயற்பாடி பகுதியில், சிறிய மளிகை கடை நடத்தி வருபவர் சுதா, 35. இவர், நேற்று முன்தினம், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.நேற்று காலை, கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாப்பெட்டியில் இருந்த, 3,000 ரூபாய், சாக்லேட் மற்றும் சிகரெட் பண்டல்கள் திருடு போயிருப்பது தெரிந்தது.கடையின் வாசலில், மதுபாட்டில்களும் சிதிறி கிடந்தன. கடையின் முன், மது அருந்தியவர்கள், திருட்டில் ஈடுபட்டு உள்ளனர்.மற்றொரு சம்பவமாக, பொன்னேரி அடுத்த, சாணார்பாளையம் கிராமத்தில், பெருமாள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், அங்கிருந்த உண்டியலையும் உடைத்து, அதிலிருந்த பணம் மற்றும் செம்பு, வெள்ளியிலான பூஜை பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றனர்.மேற்கண்ட இரண்டு திருட்டு சம்பவங்கள் குறித்தும், பொன்னேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் ஓரே கும்பலா எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.