சர்வதேச பாரா பேட்மின்டன் தங்கம் வென்ற கும்மிடி மாணவன்
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த கல்லுாரி மாணவன், சர்வதேச பாரா பேட்மின்டன் போட்டியில் தங்கம் வென்று, நாட்டிற்கு பெருமை சேர்த்தார். கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பன்னீர் - ரூபாவதி தம்பதியின் மகன் கரண், 25; மாற்றுத்திறனாளி. சென்னை மாநில கல்லுாரியில், வரலாறு பாடப் பிரிவில் எம்.ஏ., இறுதியாண்டு படித்து வருகிறார். இவர், 12 ஆண்டுகளாக பேட்மின்டன் விளையாடி வருகிறார். சர்வதேச அளவில், பல சாதனைகளை படைத்துள்ளார். இம்மாத துவக்கத்தில், நைஜீரியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மின்டன் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்றார். சர்வதேச அளவில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போட்டியில், தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். மேலும், இரட்டையர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். சர்வதேச அளவில் சாதனை படைத்த கரணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.