வெளி மாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள் வழங்க அறிவுறுத்தல்
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடையில், நேற்று, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் திடீர் ஆய்வு செய்தார். பின், கடையில் உள்ள பொருட்கள் இருப்பு விkரம், வரவு - செலவு கணக்குகள், பதிவேடுகளில் முறையாக பதிவு செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார்.தொடர்ந்து கடையில் உள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் தரமாக உள்ளதா, ரேஷன் கார்டுதாரர்களுக்கு போதுமான அளவு பொருட்கள் உள்ளதா என, விற்பனையாளரிடம் கேட்டறிந்தார்.பின், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், கடை விற்பனையாளரிடம் 'வெளி மாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் முறையாக வழங்குவதில்லை என, குற்றச்சாட்டு வருகிறது. தற்போது, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்பதால் ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் அனைவருக்கும் பொருட்கள் வழங்க வேண்டியது விற்பனையாளர்களின் கடமை மற்றும் பொறுப்பாகும்.தவறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவுறுத்தினார். கடை பெண் விற்பனையாளர், இதுவரை எங்கள் கடையில் மேற்கண்ட புகார்கள் வரவில்லை என, கூறியதும், மாவட்ட வழங்கல் அலுவலர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.