திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஐப்பசி மாத கிருத்திகை விழா ஒட்டி, மூலவருக்கு அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு வெள்ளிமயில் வாகனத்தில் உற்சவர் முருகர், வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொதுவழி மற்றும் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலைக்கோவிலில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி அருள்பாலித்து வருகிறார். கிருத்திகையை ஒட்டி நேற்று காலை 8:00 மணிக்கு, மூலவர் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மகாதீபாராதனை செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் மலைக்கோவிலில் உள்புறப்பாடு எழுந்தருளினார். திரளான பக்தர்கள், 'அரோகரா' கோஷம் முழங்க வலம் வந்தனர். பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவில், வீராணத்துார் அடுத்த கரிக்கல் குமரேசகிரி மலைக்கோவில்களிலும் நேற்று கிருத்திகை உத்சவம் நடந்தது.