உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புறக்காவல் நிலையங்கள், சோதனைச்சாவடிகள் முடக்கம்! 365 காலி பணியிடங்களால் போலீசார் பற்றாக்குறை; திருவள்ளுரில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள்

புறக்காவல் நிலையங்கள், சோதனைச்சாவடிகள் முடக்கம்! 365 காலி பணியிடங்களால் போலீசார் பற்றாக்குறை; திருவள்ளுரில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், 365 காலி பணியிடங்களை நிரப்பாததால், போலீசார் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போலீசார் நியமிக்கப்படாமல், புறக்காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச்சாவடிகள், பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. அதனால், திருவள்ளூர் மாவட்டம் முழுதும் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருவள்ளூர் மாவட்ட காவல் துறையும், 1997ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதில், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை என, நான்கு காவல் உட்கோட்டங்களில், 22 காவல் நிலையங்கள், தலா 4 மகளிர் மற்றும் மதுவிலக்கு காவல் நிலையங்கள் என, மொத்தம் 26 காவல் நிலையங்கள் உள்ளன. ஒரு காவல் நிலைத்தில், இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், முதல்நிலை போலீஸ்காரர்கள், போலீசார் என, 35 பேர் பணியில் இருக்க வேண்டும். அதன்படி, மொத்த காவல் நிலையங்களில், 910 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், தற்போது காவல் நிலையங்களில் சப் - இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர், ஏட்டுகள், முதல்நிலை போலீஸ்காரர்கள் என, மொத்தம் 390 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இதில், அலுவலக பணி மற்றும் பிற பணிகளுக்கு போலீஸ்காரர்கள் செல்வதால், காவல் நிலையங்களில் போலீசாரே இருப்பதில்லை. மாவட்டத்தில், பெத்திக்குப்பம், ஊத்துக்கோட்டை, பொன்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள ஒருங்கிணைந்த காவல் சோதனைச் சாவடிகளில் மட்டும் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். பிற காவல் சோதனைச்சாவடி நிலையங்கள் மற்றும் புறக்காவல் நிலையங்கள், போலீசார் இல்லாமல் பூட்டியே கிடக்கின்றன. இதனால், இரவு ரோந்து பணியை, பெயரளவிற்கு மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால், மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பாக்குகள், செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், அரசியல் கட்சி, அரசு நிகழ்ச்சிகளுக்கு, போலீசார் பாதுகாப்புக்கு செல்வதால், மாவட்டம் முழுதும் பிற பணிகளுக்கு போலீசார் இல்லாதால், குற்றங்கள் பெருகி வருகின்றன. உதாரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் உள்ள காவல் நிலையத்தில், நான்கு சப் - இன்ஸ்பெக்டர்கள், இரண்டு ஏட்டுகள், நான்கு முதல் நிலை போலீஸ்காரர்கள், 22 போலீசார் என, மொத்தம் 32 பேர் பணி செய்து வந்தனர். தற்போது, தரம் உயர்த்தப்பட்ட மப்பேடு காவல் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப் - இன்ஸ்பெக்டர், 3 சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர்கள், 5 ஏட்டுகள், ஒரு முதல் நிலை போலீஸ்காரர், 4 போலீசார் என, 14 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு கூடுதல் டி.எஸ்.பி., 3 போக்குவரத்து இன்ஸ்பெக்டர், 61 சப் - இன்ஸ்பெக்டர்கள், 300 போலீசார் பணியிடங்கள் என, மொத்தம் 365 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து, கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பொன்னேரி காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு ஆகிய காவல் நிலையங்கள் ஆவடி காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்றன. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்தவர்கள், தங்கள் விருப்பத்தின் பேரில், தற்போது ஆவடி மாநகர காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த காவல் நிலையங்களில், தற்போது தலா 100 போலீஸ்காரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு காவல் நிலையத்தில் 15 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். போலீசார் மற்றும் உயர் அதிகாரிகள் பற்றாக்குறையால், 25க்கும் மேற்பட்ட புறக்காவல் நிலையங்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகள், போலீசார் நியமிக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளன. அதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காவல் நிலையத்திலேயே போலீசார் பற்றாக்குறையால், சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து உள்ளிட்ட பணிகளை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறோம். நிலைமை இப்படி இருக்கும் போது, புறக்காவல் நிலையங்கள் மற்றும் சேதானைச்சாவடிகளில் எப்படி போலீசாரை பணியில் அமர்த்த முடியும். காலியான பணியிடங்கள் குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனியிடங்களை நிரப்பினால் மட்டுமே அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். எனவே, காவல் நிலையங்களில் காலியாக உள்ள போலீஸ்காரர் பணியிடங்களை நிரப்பி, புறக்காவல் நிலையங்கள், சோதனைச்சாவடிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், குற்றச் செயல்களை தடுக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை