நெடுஞ்சாலையில் மண் படலம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
திருமழிசை:சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் மண் படலம் மற்றும் தேங்கும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கு அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையில் திருமழிசை, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், தண்டலம், செட்டிபேடு ஆகிய பகுதிகளில் பக்கவாட்டு தடுப்பு இணைப்பு சாலை தடுப்பு பகுதியில் மண் படலம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்கள் செல்லும் பகுதியில் மணல் படலம் மற்றும் மழைநீர் தேங்கி கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கனரக வாகனங்களுக்காக இரு சக்கர வாகன ஓட்டிகள் விலகி செல்லும் போது அச்சத்துடன் சென்று வருகின்றனர். சில நேரங்களில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் ஆய்வு செய்து மண் படலம் மற்றும் கழிவுநீரை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.