எம்.ஆர்.எப்., டி - 20 கிரிக்கெட் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி
சென்னை: எம்.ஆர்.எப்., டி - 20 கிரிக்கெட் போட்டியில், புதுார் அரசு பள்ளி அணி உட்பட நான்கு பள்ளி அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. எம்.சி.சி., - எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து, டி - 20 கிரிக்கெட் போட்டியை, சேத்துப்பட்டில் நடத்துகிறது. நேற்று முன்தினம் துவங்கிய முதல் காலிறுதியில், நெல்லை நாடார் பள்ளி அணி, டாஸ் வென்று முதலில் ஆடி, 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து, 198 ரன்கள் குவித்தது. பின் களமிறங்கிய டான்போஸ்கோ பள்ளி அணி, 20 ஓவர்கள் போராடியபோதும், 124 ரன்களிலேயே முடங்கியது. இதனால், 74 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை நாடார் பள்ளி அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது. நேற்று நடந்த இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், புதுார் அரசு பள்ளி அணி, 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகளை இழந்து, 183 ரன்கள் சேர்த்தனர். அடுத்து ஆடிய ஹார்ட்புல்னஸ் பள்ளி அணி, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 118 ரன்களில் முடங்கியது. இதனால், புதுார் அரசு பள்ளி, 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அரையிறுதுக்குள் நுழைந்தது. மூன்றாவது ஆட்டத்தில், பவன்ஸ் ராஜாஜி பள்ளி, எம்.சி.சி. பள்ளியை, 57 ரன்கள் வித்தியாசத்திலும், நுங்கம்பாக்கம் பி.எஸ்.பி.பி., பள்ளி, கோலப்பெருமாள் பள்ளியை 9 விக்கெட் வித்தியாசத்திலும் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தன.