உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகரி அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்

நகரி அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம்

நகரி,ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், நகரி நகராட்சி, கே.வி.பி.ஆர்.பேட்டை பகுதியில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று வெகு விமரிசையாக நடந்தது.இதற்காக கோவில் வளாகத்தில் ஒன்பது யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, கடந்த 7ம் தேதி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா லட்சுமி ஹோமம் மற்றும் கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.மறுநாள், கும்ப அலங்காரத்துடன் முதல் கால யாகசாலை பூஜையும், நேற்று முன்தினம் காலையில் இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில், மூன்றாம் கால யாகபூஜையும் நடந்தது.நேற்று, காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், காலை 9:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமும் நடந்தது. பின், விநாயகர், வள்ளி தெய்வானை முருகப் பெருமான், பைரவர், நவகிரகம், உண்ணாமுலையம்மன், அண்ணாமலையார், நடராசர் சிவகாமி ஆகிய சன்னிதிகளில் மூலவர்களுக்கும் கோவில் விமானத்தின் மீதும் கலசநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.காலை 10:00 மணிக்கு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனையும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி