குடும்பநல பிரச்னை குறித்து குவியும் புகார்கள் புரிதல் இல்லாததால் தம்பதியருக்கு அதிகாரிகள் கவுன்சிலிங்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்திற்கு, குடும்ப பிரச்னை குறித்து புகார் மனுக்கள் குவிந்து வருகின்றன. புரிதல் இல்லாமல், அலுவலகத்தில் புகார் அளிக்க வரும் தம்பதியருக்கு, அதிகாரிகள் உரிய 'கவுன்சிலிங்' வழங்கி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலத்துறை செயல்பட்டு வருகிறது. திருமணமான பெண்களுக்கு, கணவர் மற்றும் அவரது உறவினர்களால் ஏற்படும் பிரச்னைகள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோர், சமூக நலத்துறையிடம் புகார் அளித்து, பிரச்னைக்கு தீர்வு கண்டு வருகின்றனர்.தமிழக அரசு சார்பில் குடும்பம், பணிபுரியும் இடம், தனிப்பட்ட மற்றும் பொது இடங்களில் வன்முறைக்கு ஆளாகும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி புரிவதற்காக, 'ஒன் ஸ்டாப் சென்டர்' எனப்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை உருவாக்கி உள்ளது.இம்மையத்தை குடும்பம் மற்றும் பணிபுரியும் இடங்களில் ஏற்படும் வன்முறை குறித்து, '181' என்ற மகளிர் உதவி எண் வாயிலாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.மேலும், மக்கள் குறைதீர் கூட்டம், காவல் துறையில் அளிக்கப்படும் புகார் குறித்தும், மாவட்ட சமூக நலத்துறையினரிடம் பெண்கள் நேரடியாக புகார் அளிக்கின்றனர். இந்த ஆண்டு ஜன., - ஏப்., இறுதி வரை 160 புகார்கள் வரப்பெற்று, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அவ்வாறு பெறப்படும் புகார் மனுக்களை பெறும் சமூக நலத்துறையினர், சம்பந்தப்பட்ட இருவரிடமும் பேசி, 'கவுன்சிலிங்' அளித்து சமரசம் செய்து வருகின்றனர்.மேலும், ஒருங்கிணைந்த சேவை மையத்தை, '181'ல் தொடர்பு கொள்ளும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, உளவியல், சட்ட உதவி ஆலோசனை, மருத்துவ உதவி, காவல் துறை உதவி மற்றும் உறைவிடம் போன்ற சிறப்பு சேவையும் வழங்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட சமூகநல துறையினர் கூறியதாவது:குடும்ப வன்முறை பிரிவில் பெறப்படும் புகார்களின் தன்மைக்கு ஏற்ப விசாரணை மேற்கொள்ளப்படும். புகார் பெறப்பட்டதும், சம்மன் அனுப்பி இருதரப்பினரிடையேயும் விசாரணை நடத்தப்படும். அவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தி, சமரசமாக செல்வதற்கு, உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறோம்.தற்போது, திருமணமான ஆறு மாதத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளான தம்பதியினர், பெருமளவில் புகார்கள் அளிக்கின்றனர். அவர்களுக்குள் திருமண வாழ்க்கை குறித்த புரிதல் ஏற்படாததால், மன உளைச்சலுக்கு ஆளாகி, விவாகரத்து வரை சென்று விடுகின்றனர். அச்சமயத்தில் எங்களிடம் புகார் அளிக்கின்றனர்.திருமணமாக இருக்கும் பிள்ளைகளுக்கு பெற்றோர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும். திருமணமானதும் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள சிறிது காலமாகும் என்பதை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.குடும்பத்தில் பிரச்னை உருவானால், அதை பெரிதாக்காமல், அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவது பெற்றோரின் கடமை. அவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி, பிரச்னையை பெரிதுபடுத்த கூடாது. இதில், பாலின பாகுபடு கிடையாது.பெரும்பாலான பிரச்னைகளுக்கு மொபைல்போன்களே மையமாக உள்ளன. அதை சரியான முறையில் பயன்படுத்தினால், பிரச்னைகளை வெகுவாக குறைக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.குடும்ப வன்முறையில் உண்மையாக சிக்கும் பெண்கள், எவ்வித தயக்கமுமின்றி '181' எண்ணை அழைக்கலாம். இது, முழுக்க முழுக்க பெண்களுக்கான சேவை மையம். இம்மையத்திற்கு எவ்விதமான புகாரும் அளிக்கலாம். அந்த புகாருக்கு தீர்வு காணும் வரை, கண்காணிப்பு தொடரும் என, சமூகநல துறையினர் தெரிவிக்கின்றனர்.ஐந்து ஆண்டுகளில் பெறப்பட்டபுகார்கள் குறித்தான மனு விபரம்ஆண்டு புகார்கள்2021 2902022 3682023 5222024 3132025(ஜன., - ஏப்.,) 160