திருப்பந்தியூரில் நிலம் மீட்பிற்கு எதிர்ப்பு ஒருவர் தற்கொலைக்கு முயற்சி
பண்ணுார்:கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் ஊராட்சிக்குட்பட்டது பண்ணுார். இங்குள்ள அந்தோணியார்புரத்தில் சர்வே எண்.40ல் அரசு புறம்போக்கு நிலம ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது.இந்நிலையில், இப்பகுதியில் இருளர்கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, நேற்று முன்தினம், திருவள்ளூர் தாசில்தார் ரஜினிகாந்த், கடம்பத்துார் ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹரிபாபு, மப்பேடு வருவாய் ஆய்வாளர் பாரதிபிரியா மற்றும் மப்பேடு போலீசார் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி மேற்கொண்டனர்.அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, 40, என்பவர், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மரத்தின் மீது கயிறுடன் ஏறி கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என, மிரட்டியுள்ளார்.இதையடுத்து, அதிகாரிகள் அவரிடம் சமாதானப் பேச்சு நடத்தியதையடுத்து அவர் மரத்தில் இருந்து இறங்கினர்.பின், அதிகாரிகள், காவல்துறை ஒத்துழைப்புடன் அப்பகுதியை அளவீடு செய்து தலா, 2 சென்ட் வீதம், 25 இருளர் மக்களுக்கு பட்டா வழங்கினார்.மேலும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 15 பேருக்கு விரைவில் வீடு கட்டும் பணி துவங்க உள்ளதாகவும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார்.