உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளம் சீரமைப்பிற்கு செலவிட்ட ரூ.70 லட்சம் வீணான அவலம் பராமரிப்பு இல்லாததால் மக்கள் அதிருப்தி

குளம் சீரமைப்பிற்கு செலவிட்ட ரூ.70 லட்சம் வீணான அவலம் பராமரிப்பு இல்லாததால் மக்கள் அதிருப்தி

மீஞ்சூர்:மீஞ்சூரில் உள்ள அம்மாச்செட்டிக்குளம் சீரமைக்கப்பட்டு ஓராண்டிற்குள் சேதமடைந்ததால், அதற்காக, செலவிடப்பட்ட 70 லட்சம் ரூபாய் வீணாகி வருவதாக, அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரியன்வாயல் பகுதியில், 3 ஏக்கரில் அம்மாச்செட்டிக்குளம் அமைந்துள்ளது. அரியன்வாயல் பகுதி மக்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, கடந்தாண்டு 70 லட்சம் ரூபாய் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குளத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர், நடைபயிற்சி செய்வோரின் வசதிக்காக கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, மின்விளக்கு, குளத்திற்கு நீர்வரத்து மற்றும் வெளியேறுவதற்கான குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முறையாக மேற்கொள்ளாததால், தற்போது குளம் முழுதும் ஆகாயத்தாமரை சூழ்ந்தும், நடைபாதைகள் சிதைந்தும் உள்ளன. மேலும், குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்ட நிலையில், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதற்காக செலவிட்ட, 70 லட்சம் ரூபாய் வீணாகி வருகிறது. எனவே, மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம், உடனே குளம் சீரமைப்பு பணிகளை முழுமையாக முடித்து, ஆகாயத்தாமரைகளை அகற்றி, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ