நெடுஞ்சாலை துறையை கண்டித்து பொன்னேரி து.தலைவர் மறியல் சேதமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட செங்குன்றம் சாலை, அதாவுல்லாஷா சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைகளில், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.பாதாள சாக்கடை திட்டம் மற்றும் இணையதள கேபிள் பதிப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், சரிவரை மூடப்படாமலும், அதன்மீது புதிய சாலை அமைக்கப்படாமலும் உள்ளது.இந்த பள்ளங்களால், சாலை குறுகலாக மாறி, வாகனங்கள் சிரமத்துடனும், தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன.கடந்த 24ம் தேதி, செங்குன்றம் சாலையில் லாரி மோதி, கல்லுாரி மாணவி ஒருவர் பலியானார். அதன் பின்னும் சாலை சீரமைப்பில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியம் காட்டி வருகிறது.இந்நிலையில், நேற்று பொன்னேரி நகராட்சி, அ.தி..மு.க., துணை தலைவர் விஜயகுமார், அப்பகுதிவாசிகளுடன் இணைந்து, நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து, பொன்னேரி - செங்குன்றம் சாலையின் நடுவில் அமர்ந்து, திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.இது குறித்து அவர் கூறியதாவது:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சாலைகள் சேதம் அடைந்து உள்ளன. இது குறித்து, பலமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.அத்துறையின் அலட்சியம் மற்றும் மெத்தனப் போக்கால், சில தினங்களுக்கு கல்லுாரி மாணவி ஒருவர் விபத்தில் பலியானார்.சாலைகள் குறுகலாக மாறி வருகின்றன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, பொன்னேரி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பொன்னேரி நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் பாலசந்திரன் மற்றும் பொன்னேரி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, மறியலில் ஈடுபட்ட துணைத்தலைவரிடம் பேச்சு நடத்தினர்.அப்போது, சேதம் அடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, அவர் போராட்டத்தை கைவிட்டார்.