உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தெருச்சாலைகளை சீரமைக்காததை கண்டித்து போராட்டம்

தெருச்சாலைகளை சீரமைக்காததை கண்டித்து போராட்டம்

சோழவரம்:குண்டும், குழியுமாக உள்ள தெருச்சாலைகளை சீரமைக்காததை கண்டித்து, நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். சோழவரம் ஒன்றியம் அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் பகுதியில் உள்ள பகவத்சிங் தெரு, பிள்ளையார்கோவில் தெரு ஆகியவை சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளன. அவற்றில் மழைநீர் தேங்கியிருப்பதால், குடியிருப்பு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலையை சீரமைக்காததை கண்டித்து, நேற்று மா.கம்யூ., கட்சி சார்பில், சாலை பள்ளங்களில் தேங்கிய தண்ணீரில், வாழை கன்று நடும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர். இதற்காக நேற்று காலை, எடப்பாளையம் பகுதியில் அக்கட்சியினர் மற்றும் குடியிருப்பு மக்கள் குவிந்தனர். சாலைகளை சீரமைக்காத சோழவரம் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேதமடைந்த சாலையில் வாழைக்கன்றுகளை நடும் போராட்டம் நடத்த முயன்ற போது, சோழவரம் போலீசார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, 'தெருச்சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். அதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி