பூண்டி அணை உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்
ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் ஆதாரங்களில் பூண்டி கிராமத்தில் உள்ள சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கம் முக்கியமானது. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்ததால், பெய்த பலத்த மழையால் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது.மழை காரணமாக நீர்வரத்து வினாடிக்கு, 16,500 கன அடி வீதம் வந்ததால், அதை அப்படியே அங்குள்ள மதகுகள் வழியே வெளியேற்றப்பட்டது.இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.தற்போது மழை நின்றதால், நீர்வரத்து நின்று போனது. இதன் காரணமாக நேற்று முதல், பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து, உபரிநீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.நேற்று, காலை 6:00 மணி நிலவரப்படி, நீர்த்தேக்கத்தில், 2.79 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 33.76 அடி. மழைநீர் வரத்து வினாடிக்கு, 1,810 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. பூண்டியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளதால், கரையோர கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.