சாலையோர நாகலிங்க மரங்களை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை
கும்மிடிப்பூண்டி:சாலை விரிவாக்க பணியின் போது, நாகலிங்க மரங்களை அப்புறப்படுத்தாமல், வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என, ஈகுவார்பாளையம் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இயற்கையிலேயே நாகலிங்கத்தை போன்ற வடிவம் உடைய பூக்களாக இருப்பதால், நாகலிங்க பூ எனவும், அதன் மரம் நாகலிங்க மரம் எனவும் அழைக்கப்படுகிறது. தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது.மருத்துவ குணம் உடைய இதன் இலைகள், சருமம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சிவன் கோவில்களில் மட்டுமே இந்த வகை மரம் அபூர்வமாக காணப்படுகிறது.கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் சாலையில், ஈகுவார்பாளையம் கிராமத்தில், மூன்று நாகலிங்க மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் 100 ஆண்டுகளை கடந்த பழமையான மரம்.கும்மிடிப்பூண்டி - மாதர்பாக்கம் சாலையில், ஈகுவார்பாளையம் மேடு முதல் மாதர்பாக்கம் வரை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளன. அதற்கான பணிகளை, மாநில நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள உள்ளனர். அப்போது, இந்த மரங்களை அகற்றாமல், பாதுகாப்பாக அப்புறப்படுத்தி, அதே கிராமத்தில் வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மாநில நெடுஞ்சாலை துறை பொறியாளர் கூறுகையில், 'ஈகுவார்பாளையம் கிராமத்தில் உள்ள மூன்று நாகலிங்க மரங்களை வேரோடு அகற்றி, வேறு இடம் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்' என தெரிவித்தார்.