போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆலமரத்தை அகற்ற கோரிக்கை
அச்சிறுபாக்கம்:பெரும்பேர் கண்டிகையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆலமரத்தை வெட்டி அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே உள்ள பெரும்பேர் கண்டிகை ஊராட்சியில் பழமையான எல்லையம்மன் கோவில் மற்றும் மலை மீது முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில்கள் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்க, பண்டிகை மற்றும் பிற நாட்களில் சுவாமி தரிசனம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து கார், வேன் மற்றும் பேருந்துகளில் கோவிலுக்கு வருகிறனர். இதில், கோவில் நுழைவு வாயில் எதிரே குளக்கரையின் மீது பழமையான ஆலமரம் உள்ளது. இந்த ஆலமரம் அப்பகுதியில் போக்குவரத்திற்கும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் இடையூறாக உள்ளது. மேலும், சீதாபுரம், திம்மாபுரம், திருமுக்காடு உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு செல்லும் மிக முக்கிய சாலையை ஆக்கிரமித்து, ஆலமரம் வளர்ந்துள்ளதால் அரசு நகர பேருந்துகள் செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே, பொது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆலமரத்தை வேருடன் அகற்ற துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.