பொன்னேரியில் மின்மீட்டர் பற்றாக்குறை புதிய இணைப்பு பெற முடியாமல் தவிப்பு
பொன்னேரி:பொன்னேரி துணை மின் நிலையத்தில் இருந்து, குடியிருப்பு, வணிகம், விவசாயம் என, ஒரு லட்சத்திற்கு அதிகமான மின் பயனீட்டாளர்களுக்கு மின் விநியோகம் நடைபெறுகிறது.பொன்னேரி நகரத்தை சுற்றிலும், புதிய வீட்டுமனைப்பிரிவுகளும், அதில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன.புதிய வீடு கட்டுபவர்கள், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கின்றனர். புதிய மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்த, 300க்கும் மேற்பட்டோர் ஒரு மாதமாக காத்திருக்கின்றனர்.'ஒரு முனை மின் இணைப்பு' வழங்குவதற்கான மின்மீட்டர்கள் 'ஸ்டாக் இல்லை' என மின்வாரியம் கைவிரிக்கிறது. இதனால் புதியதாக வீடுகள் கட்ட ஆயத்தமானவர்கள் மின் இணைப்பு இல்லாமல் அடுத்த கட்ட பணிகளை துவங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.இது குறித்து சிலர் கூறியதாவது:பூமி பூஜை போட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. மின் இணைப்பு கிடைக்காமல் வீடு கட்டும் பணிகளை துவங்க முடியாமல் இருக்கிறோம். தேவையான ஒருமுனை மின் இணைப்பு மீட்டர்களை கொள்முதல் செய்து, மின் இணைப்புகளை வழங்க மின்வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.