அரசு பஸ் நடத்துநரை செருப்பால் அடித்து மாணவர் தப்பியோட்டம்
திருத்தணி: படியில் தொங்கியதை தட்டிக்கேட்ட அரசு பேருந்து நடத்துநரை, செருப்பால் அடித்து தப்பிச்சென்ற பள்ளி மாணவனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து தடம் எண் '27ஏ' என்ற பேருந்து, அத்திமாஞ்சேரிபேட்டை, நொச்சிலி, கே.ஜி.கண்டிகை வழியாக திருத்தணி வரை தினமும் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை, திருத்தணி அடுத்த கோரமங்கலம் பகுதியில், பள்ளி மாணவ - மாணவியரை ஏற்றிக்கொண்டு, இந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, கே.ஜி.கண்டிகை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பேருந்தின் உள்ளே செல்லாமல், படிக்கட்டு மற்றும் ஜன்னல் கம்பிகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். தற்காலிக ஓட்டுநர் சூர்யா, நடத்துநர் தியாகராஜன் ஆகியோர், படியில் தொங்காமல் பேருந்தினுள் வரும்படி மாணவர்களை கண்டித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஒரு மாணவன், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பேருந்து நிறுத்தப்பட்டது. திடீரென மாணவர், தன் செருப்பை கழற்றி, நடத்துநரை அடித்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார். மாணவனின் இந்த அராஜக செயலால், பயணியர் அதிர்ச்சியடைந்தனர். நடத்துநர் தியாகராஜன் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.