ஆந்திர எல்லையோர சாலையில் கண்காணிப்பு பணி அவசியம்
கும்மிடிப்பூண்டி:ஆந்திர எல்லையோர தமிழக நெடுஞ்சாலை வழியாக கடத்தல் சம்பவங்களை தடுக்க, கண்ணம்பாக்கம் கிராமத்தில் சோதனைச்சாவடி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி பகுதியில், ஆந்திராவில் இருந்து தமிழகத்தை இணைக்கும் சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், எளாவூர் பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது.அதேபோல, ஆந்திர மாநிலத்தை இணைக்கும் கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில், பொம்மாஜிகுளம் பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது.ஆனால், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் கிராமத்தில் இருந்து மாநெல்லுார், பல்லவாடா, கண்ணம்பாக்கம் வழியாக ஆந்திர மாநிலம் ஆரூர், தடா செல்லும் சாலையில் சோதனைச்சாவடி இல்லை. தகவல் கிடைத்தால் மட்டுமே, அச்சாலையில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.இதனால், இச்சாலை வழியாக அரிசி, கஞ்சா, மணல் கடத்தல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. கண்ணம்பாக்கம் கிராமத்தில் சோதனைச்சாவடி அமைத்தால், இரு மாநிலங்களுக்கு இடையேயான கடத்தல் சம்பவங்களை தடுக்க முடியும்.அதற்கு, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.