திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி
சோளிங்கர், டிச. 26--சோளிங்கர் அடுத்த, கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். 1,305 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலுக்கு எதிரே சிறிய மலையில், அனுமன் அருள்பாலித்து வருகிறார்.யோக நிலையில் உள்ள நரசிம்ம சுவாமியிடம் வேண்டும் பக்தர்களின் வேண்டுதலை அனுமன் கேட்டு நிறைவேற்றுவதாக ஐதீகம். யோக நரசிம்மரின் உற்சவரான பக்தோசித பெருமாள், சோளிங்கர் நகரில் அருள்பாலித்து வருகிறார்.தற்போது, இந்த கோவிலில் தனுர் மாத உற்சவம் நடந்து வருகிறது. மார்கழியில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி, பக்தோசித பெருமாள் கோவிலில் நடத்தப்படுவது வழக்கம்.நேற்று மாலை, கோவில் மண்டபத்தில் நடந்த திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியில், நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் பங்கேற்றனர். வேத விற்பன்னர்கள், நடுவர்களாக பங்கேற்று, சிறப்பாக பாசுரம் பாடிய மாணவ - மாணவியரை தேர்ந்தெடுத்து பாராட்டினர்.