வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதில் திருத்தணி நீர்வளத்துறையினர் அலட்சியம்
திருத்தணி:வடகிழக்கு பருவ மழை இன்னும் சில நாட்களில் துவங்க உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், பேரிடர் காலத்தில் தயாராக இருக்க வேண்டிய இயந்திரங்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.மேலும் மழைநீர் சூழ்ந்தால் அங்கு வசிப்பவர்களை மீட்டு முகாம்களில் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என வருவாய் துறை, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.ஆனால் திருத்தணி நீர்வளத்துறையினர் மட்டும் மெத்தனமாக செயல்படுகின்றனர். இந்த துறையின் மூலம் திருத்தணி வருவாய் கோட்டத்தில், 79 ஏரிகளை பராமரித்தும், நந்தியாறு மற்றும் கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, கண்காணித்து வருகின்றனர்.வழக்கமாக பருவ மழையின் போது, நீர்வளத்துறையினர் ஏரி உடைப்பு, மதகு சேதம் மற்றும் தண்ணீர் கசிவு ஆகியவை தடுக்க ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன்னதாக மணல் மூட்டைகள், சவுக்கு கொம்புகள் தயார் நிலையில் வைத்திருப்பர். ஆனால் தற்போது வரை நீர்வளத்துறையினர் பருவ மழைக்காக புதியதாக மணல் மூட்டைகள் தயார்படுத்தவில்லை. மேலும் திருத்தணி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கடந்தாண்டு தயார் செய்யப்பட்ட மணல் மூட்டைகள் குறைந்த அளவிலேயே உள்ளன. இந்த மணல் மூட்டைகளும் சேதம் அடைந்துள்ளதால் ஏரிகள் உடைப்பு மற்றும் தண்ணீர் கசிவு தடுக்க முடியாத நிலையில் உள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து நீர்வளத்தறை அதிகாரிகளுக்கு போதிய அறிவுரை வழங்கி கூடுதல் மணல் மூட்டைகள் தயாரித்து, ஏரிகளில் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.