வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தயார்
திருவள்ளூர், வடகிழக்கு பருவமழையின் போது, எவ்வித இழப்பும் வராத வகையில், அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். வெள்ளம் பாதிக்கும் பகுதிகளில், பாதுகாப்பு உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணி மற்றும் பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி வருவதால் அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். கடந்த காலங்களில், 'மிக்ஜாம்' புயலினால் பெரும் சேதம் ஏற்பட்டது. தற்பொழுது வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துஉள்ளது. எனவே, பேரிடர் காலங்களில் சுணக்கம் காட்டாமல் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை திறமையாக கையாள வேண்டும். மழை காலம் வர உள்ளதால், 'மெட்ரோ வாட்டர்' போன்ற தண்ணீர் சம்பந்தமான பணிகளில் சாலைகளில் ஏதாவது பள்ளம் ஏற்பட்டிருந்தால் அதை உடனடியாக சம்பந்தப்பட்ட துறையை அணுகி நடவடிக்கை எடுத்து, பள்ளத்தினை சரி செய்து தீர்வு காண வேண்டும்.வெள்ளம் சூழ்கின்ற பகுதிகளுக்கு படகுகளை வரும் 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும். பொதுமக்கள் தங்க வைக்கப்படும் இடங்களில், உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியினை தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் ஏற்படுத்தி தர வேண்டும்.அதேபோல் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் மக்களை தங்க வைக்கும் பாதுகாப்பான இடங்களில் கட்டடங்களில், தண்ணீர் கசிவு இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.சேதமடைந்த பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களை கணக்கீடு செய்து மழை காலத்திற்குள், சரிசெய்து தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.