அனல்மின் நிலைய சாலையில் பராமரிப்பு இல்லாத பாலம்
மீஞ்சூர், வடசென்னை அனல்மின் நிலைய சாலையில், பாலம் பராமரிப்பு இன்றி இருப்பதால், பலவீனம் அடைந்து வருகிறது. மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தின் முகப்பில் உள்ள கால்வாய் பாலம் பராமரிப்பு இன்றி உள்ளது. பாலத்தின் பக்கவாட்டு பகுதிளில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், பாலத்தின் உறுதிதன்மை கேள்விக்குறியாகி உள்ளது. முட்செடிகள் சாலை வரை நீண்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆங்காங்கே கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்துள்ளன. இதனால், பாலம் பலவீனமடைந்து வருகிறது. மேலும், எண்ணுார் வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள் இந்த பாலத்தை பயன் படுத்துகின்றன. எண்ணுார், கத்திவாக்கம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அத்திப்பட்டு, காட்டுப்பள்ளியில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். அவர்களும் இப்பாலத்தை பயன் படுத்துகின்றனர். எனவே, பாலம் முழுமையாக பலவீனமடையும் முன், புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.