மின்சாரம் தாக்கி வேன் டிரைவர் பலி
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சாலையின் குறுக்கே தாழ்வாக சென்ற மின் ஒயரை கையால் பிடித்த டிரைவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.கும்மிடிப்பூண்டி அருகே பெரிய நத்தம் கிராமத்தில் வசித்தவர் மோகன், 39. வேன் டிரைவர். நேற்று காலை, அருகில் உள்ள சின்னநத்தம் கிராமத்தை சேர்ந்த, 20 பேரை ஏற்றிக்கொண்டு மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் கிராமத்தில் நடந்த காதணி விழாவுக்கு சென்றார். சின்னநத்தம் கிராமத்தில் சாலையின் குறுக்கே, ஊராட்சிக்குட்பட்ட மின் மோட்டார் ஒயர் தாழ்வாக செல்வதை கண்ட மோகன் வேனில் உரசி அறுபடும் என்பதால், வேனில் இருந்தபடி, மின் ஒயரை கையால் துாக்க முயன்றார். அப்போது மின் கசிவு ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் தாக்கியதில் சுயநினைவு இழந்தார். கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக கூறினர். ஆரம்பாக்கம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.