உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழவேற்காடு சரணாலயத்தில் குவியும் குப்பைக்கு...விமோசனம் எப்போது?:இரு மாதத்தில் 50 ஆலிவ் ரிட்லி ஆமைகள் உயிரிழப்பு;பல்லுயிர் பாதிப்பால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி

பழவேற்காடு சரணாலயத்தில் குவியும் குப்பைக்கு...விமோசனம் எப்போது?:இரு மாதத்தில் 50 ஆலிவ் ரிட்லி ஆமைகள் உயிரிழப்பு;பல்லுயிர் பாதிப்பால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி

பழவேற்காடு:- பழவேற்காடு ஏரி, கடற்கரை, கழிமுக பகுதிகளில் குவிக்கப்படும் குப்பையால், சரணாலயத்தில் உள்ள பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள், கால்நடைகள் என, பல்லுயிர்கள் பாதிக்கப்படுகின்றன. கடந்த ஜன., - பிப்., மாதங்களில் மட்டும், 50 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில், பழவேற்காடில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படாமலும், நெகிழிகளுக்கு தடை விதிக்கப்படாமலும் இருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. பறவைகள் சரணாலயம், அழகிய கடற்கரை, டச்சு கல்லறைகள், கலங்கரை விளக்கம் ஆகியவற்றுடன் மாவட்டத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.

Galleryகடற்கரை அழகை ரசிக்க, பறவைகளை பார்வையிட, ஏரியில் குளித்து விளையாட என, விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். புத்தாண்டு, காணும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில், 30,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணியர் வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள், கடற்கரை பகுதிகளில் குவிக்கப்படுகின்றன. மேலும், குடியிருப்புகளின் குப்பை கழிவு, பறவைகள் உலா வரும் கழிமுக பகுதி மற்றும் பழவேற்காடு ஏரியின் மீன் இறங்குதளம் பகுதியில் கொட்டி குவிக்கப் படுகின்றன. இவ்வாறு பழவேற்காடு ஏரி, கடற்கரை, கழிமுகம், பிரதான சாலையோரங்களில் குவிக்கப்படுவதால், பல்லுயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பழவேற்காடு சரணலாய பகுதியில் பூநாரை, வர்ணநாரை, கூழைக்கடா என, 145 வகையான பறவையினங்கள் வந்து செல்கின்றன. அதேபோல், பழவேற்காடு கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் டிசம்பர் - ஏப்ரல் மாதங்களில், 'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைகள், முட்டையிட்டு செல்வது வழக்கம். பழவேற்காடு மீனவ கிராமங்களை சுற்றிலும் கழிமுக பகுதிகளாக உள்ளன. மேய்ச்சல் இல்லாத நிலையில், கால்நடைகள் குப்பை கழிவுகளில் இரை தேடுகின்றன. கடற்கரை, கழிமுகம், ஏரிக்கரை பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளால், பறவைகள், கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லும் கடல் ஆமைகள் மற்றும் கால்நடை உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மாவட்டத்தின் சுற்றுலா தலமான இங்கு, குப்பை கழிவுகளை முறையாக கையாள திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதும், பிளாஸ்டிக்கு தடை விதிக்காததும், சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த கடற்கரை சுற்றுச்சூழல் ஆர்வலர் துரைமகேந்திரன் கூறியதாவது: அதிகப்படியான கடல் அலைகளின்போது, கடற்கரையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், கடல் நீருடன் அடித்து செல்லப்படுகிறது. இவை, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. கடலின் சுற்றுச்சூழல் பாதித்து, கடந்த ஜன., - பிப்., மாதங்களில் மட்டும், 50க்கும் மேற்பட்ட 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. அவற்றை ஆய்வு செய்த தில், கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசால், இறந்து கரை ஒதுங்கியது தெரிய வந்தது. அதன்பின், கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடற்கரை, ஏரி, கழிமுக பகுதிகளில் குப்பை கொட்டுவதை தடுத்து, முறையாக தரம்பிரித்து கையாள, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், இங்குள்ள பல்லுயிர் களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விடும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து, பழவேற்காடு ஏரி, கடற்கரை, கழிமுக பகுதிகளில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என, சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலா பயணியருக்கு அறிவுறுத்தல்

இதுகுறித்து, மீஞ்சூர் ஒன்றிய அதிகாரி கூறியதாவது: பழவேற்காடு பகுதியில் குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பையை மட்கும், மட்காதவை என, தரம்பிரித்து சேகரிக்க, ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தினமும் கடற்கரை, ஏரிக்கரை பகுதிகளில் குப்பை சேகரிக்கப்படுகிறது. சுற்றுலா பயணியருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதற்காக திட்ட முன்மொழிவு தயாரித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ