கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி
திருவள்ளூர்,நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக மனு அளிக்க வந்த பெண், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, திருத்தணி அடுத்த சித்தப்பனுார் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மனைவி பரிமளா, 39, என்பவர், தனது இடத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்ததாக கூறி, மனு அளிக்க வந்தார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெயை, தனது உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த போலீசார், அவரை தடுத்து, அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். பின், அவரிடம் விசாரித்த போது, அவரது இடத்தை, சிலர் போலியாக ஆவணம் தயாரித்து ஆக்கிரமிக்க முயல்வதாகவும், அதை தடுத்த தங்கள் குடும்பத்தினர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, திருவள்ளூர் நகர காவல் நிலைய போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.