அபராதத்தில் முறைகேடு போலீஸ்காரர் சஸ்பெண்ட்
திருவாரூர்:வாகன ஓட்டியிடம் வசூலித்த அபராத தொகையை நீதிமன்றத்தில் கட்டாமல், முறைகேடு செய்த போலீஸ்காரர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவில் காவலராக பணிபுரிபவர் பிரகாஷ், 40. இவர், 2023 - 24ல், திருவாரூர், போக்குவரத்து காவலராக பணிபுரிந்தார். அப்போது, நடுவப்பிடாகையை சேர்ந்த ஒருவர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக, 10,000 ரூபாய் அபராதம் விதித்தார். இத்தொகையை, அவர் கட்டியுள்ள நிலையில், அந்த நபர், டூ - வீலரை விற்க முயன்றார். அப்போது, காவல் துறை விதித்த, அபராதம் கட்ட வேண்டி இருப்பதாக இருந்தது. திருவாரூர் எஸ்.பி.,யிடம், அந்நபர் புகார் செய்தார். எஸ்.பி., உத்தரவில், தனிப்படை போலீசார் விசாரித்ததில், போலீஸ்காரர் பிரகாஷ், அபராதமாக பெற்ற, 10,000 ரூபாயை நீதிமன்றத்தில் கட்டாமல் இருந்தது தெரியவந்தது. நேற்று முன்தினம், பிரகாஷை, தற்காலிக பணிநீக்கம் செய்து, எஸ்.பி., கருண்கரட் உத்தரவிட்டார்.