| ADDED : மே 01, 2024 11:34 PM
பல்லடம் : பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள், திருப்பூர், பல்லடம் வட்டார பகுதிகளில் உள்ளபனியன் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தினசரி வேலைக்கு சென்று வருகின்றனர்.பொள்ளாச்சி ரோட்டில், பாலம் விரிவாக்க பணி நடந்து வருவதால், அனைத்து வாகனங்களும் மாற்று வழித்தடம் பயன்படுத்தி சென்று வருகின்றன. இதற்கிடையே, திருப்பூர்,- பொள்ளாச்சி, உடுமலை வந்து செல்லும் சில அரசு பஸ்கள், பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு வருவதை தவிர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பொள்ளாச்சி, உடுமலை செல்ல மாற்று வழித்தடத்தை பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் நேரம், விரயம் மற்றும் வாகன நெரிசல் ஏற்படும் என்பதால், சில அரசு பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் வருவதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.பல்லடம் பஸ் ஸ்டாண்ட் வராமல், பழைய பொள்ளாச்சி பைபாஸ் ரோட்டில் பயணிகளை இறக்கி விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால், இறக்கி விடப்படும் பயணிகள் பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்வதுடன், பொள்ளாச்சி உடுமலை பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், தொழிலாளர்கள் பலர் பஸ் கிடைக்காமல் ஏமாற்றமடைகின்றனர்.எனவே, வாகன போக்குவரத்து மாற்றத்தை இடையூறாக கருதாமல், பயணிகளின் நலன் கருதி அனைத்து பஸ்களும் பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்பது, பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு.