குழந்தைகளின் செல்லம் பால விநாயகர் கோவில்
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு மிக அருகில், அரச மரத்தடி பால விநாயகர் கோவில் உள்ளது. கோவில் கட்டப்பட்டு, 150 ஆண்டுகள் ஆகிறது. திடீர் உடல் நலக்குறைவு ஏற்படும் குழந்தைகளுக்கு மந்திரிக்கும் பழக்கம் உள்ளது. அதற்காக, விநாயகரின் பாதத்தில் ஏடு வைத்து, பூஜித்து, அதனை குழந்தைகளின் கழுத்தில் கட்டினால், உடல்நிலை குணமாகி வருகிறது. இதற்காக, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள், தங்களது குழந்தைகளை அழைத்து வந்து ஏடு கட்டி செல்கின்றனர். பயந்த குணம், இரவில் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும் குழந்தைகள், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுபோக்கால் அவதிப்படும் குழந்தைகளுக்கு ஏடு (மந்திரிக்கும் கயிறு) கட்டப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில் கோவிலுக்கு வரும் போது சோர்ந்திருக்கும் குழந்தைகள், ஏடு கட்டி, திருநீறு நெற்றியில் வைத்த பின், தெளிவும், உற்சாகமும் பெறுகின்றனர். கும்பாபிேஷகம் நடத்துவதற்கான ஆயத்த பணி நடந்து வருகிறது. மேம்பாலம் பணிக்காக கோவில் இடிக்கப்பட்ட நிலையிலும், இன்றளவும் பழமையான அரசமரத்தடி விநாயகர் அகற்றப்படாமல் அப்படியே அருள்பாலிக்கிறார்.