உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிரந்தர அலுவலகம் இல்லாத துறைகள்; விவசாயிகள் அலைக்கழிப்பு

நிரந்தர அலுவலகம் இல்லாத துறைகள்; விவசாயிகள் அலைக்கழிப்பு

உடுமலை : வேளாண் பொறியியல் துறை மற்றும் பட்டு வளர்ச்சித்துறைக்கு, நிரந்தர அலுவலக கட்டடம் இல்லாததால், உடுமலை வட்டார விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. விவசாயிகளுக்கான வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகள், ஒருங்கிணைந்த கட்டடத்தில், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனால், பிற முக்கிய துறைகளுக்கு நிரந்தர அலுவலக கட்டடம் இல்லை.தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, விவசாயம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டம் வேளாண் பொறியியல் துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்துறைக்கான பங்களிப்பு விவசாயத்துக்கு அதிகரித்து வருகிறது. நீண்ட இழுபறிக்குப்பிறகு, உடுமலையில், வேளாண் பொறியியல் துறை அலுவலகம், சில ஆண்டுகளுக்கு முன், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலகத்தின் மேல்தளத்தில் இயங்கி வந்தது.போதிய இடவசதி இல்லாததால், அங்கிருந்து, வாடகை கட்டடத்திற்கு துறை இடம் மாற்றப்பட்டது. அதன்பிறகு, அந்த அலுவலகம், இரு இடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. இதனால், அலுவலர்களும் விவசாயிகளும் பாதித்து வருகின்றனர்.

பட்டு வளர்ச்சி துறை

மாநிலத்தில் வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில் உடுமலை பகுதி முன்னிலை வகிக்கிறது. இதற்கு முக்கிய பங்கு வகிக்கும், பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நிரந்தர கட்டடம் இல்லாமல் இருந்தது.தற்போது, மைவாடியிலுள்ள பட்டு வளர்ச்சித்துறை பயிற்சி மையத்தில், உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு உடுமலை சுற்றுப்பகுதிகளில் இருந்து செல்ல போதிய பஸ் வசதியில்லை.நகரில் இருந்து, தொலைவில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு செல்ல, பல்வேறு இடையூறுகள் உள்ளது. எனவே, உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில், வேளாண் பொறியியல் துறை மற்றும் பட்டு வளர்ச்சித்துறைக்கு, நிரந்தர கட்டடம் கட்ட வேண்டும் என தமிழக அரசை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை