திருப்பூர்:'வேட்பாளர் முகவர்களிடம் இன்முகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்; எவ்வித வாக்குவாதமும் செய்யக்கூடாது' என, ஓட்டு எண்ணும் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாட்டின், 18வது லோக்சபா தேர்தல் ஏழு கட்டமாக நடந்து கொண்டிருக்கிறது. வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. ஓட்டு எண்ணும் பணியில் ஈடுவோர், அதிகாலை 5:00 மணிக்கு, அடையாள அட்டையுடன் கல்லுாரியில் ஆஜராகிவிட வேண்டும். ஓட்டு எண்ணிக்கை நடக்கும், 4ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, குலுக்கல் முறையில் ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர், நுண்பார்வையாளர்களுக்கு மேஜை ஒதுக்கீடு செய்ய, இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. காலை, 8:00 மணிக்கு தபால் ஓட்டு எண்ணிக்கையும், 8:30 மணிக்கு 'கன்ட்ரோல் யூனிட்' ஓட்டு எண்ணிக்கையும் நடக்கும். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், தலா, 14 டேபிளில் எண்ணிக்கை நடக்க உள்ளது. மத்திய அரசு பணியாளர், ஒவ்வொரு டேபிளுக்கும் நுண் பார்வையாளராக நியமிக்கப்பட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர், உதவியாளர் உட்பட, மூன்று பேர் டேபிளில் இருப்பர். ஓட்டு எண்ணும் மையத்துக்குள், மொபைல் போன், லேப்டாப், 'ஐ - பேட்' உட்பட, எவ்வித மின்னணு சாதனமும் அனுமதிக்கப்படாது. 'கன்ட்ரோல் யூனிட்' மற்றும் ஓட்டுப்பதிவு விவரம் உள்ள, 17சி படிவம் மட்டும் டேபிளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு டேபிளிலும், எண்ணப்பட வேண்டிய ஓட்டுச்சாவடி விவரம் ஒட்டப்பட்டிருக்கும். முகவர் முன்னிலையில், 'அட்ரஸ் டேக்' சரிபார்த்த பின்னரே, திறக்கப்பட வேண்டும். 'கன்ட்ரோல் யூனிட்' சீல்களை சரிபார்த்த பின் எண்ணிக்கைக்கு ஏற்க வேண்டும். ஓட்டு எண்ணிக்கையை, மேற்பார்வையாளரும் கவனமாக குறித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுற்றிலும், மொத்த ஓட்டு எண்ணிக்கை, 17சி படிவத்துடன் சரிபார்க்கப்பட்டு, வேட்பாளர் முகவர்களிடம் கையொப்பம் பெறப்பட வேண்டும். முகவர்கள் கேட்டுக்கொண்டால், 'கன்ட்ரோல் யூனிட்' ஓட்டுக்களை மறுபடியும் எண்ணி காண்பிக்கலாம். ஓட்டு எண்ணும் மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களிடம் இன்முகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்; எவ்வித வாக்குவாதமும் செய்யக்கூடாது என்று ஓட்டு எண்ணிக்கை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'விவி பேட்' ஓட்டு எண்ணிக்கை
ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும், ஐந்து ஓட்டுச்சாவடிகளின் 'விவி பேட்' சீட்டுகள் எண்ணப்படும். ஓட்டுச்சாவடிகளில் சேகரித்து வைக்கப்பட்ட, 'விவி பேட்' சீட்டுகளை எண்ணி, 'கன்ட்ரோல் யூனிட்'டில் பதிவாகியுள்ள வேட்பாளர் வாரியான ஓட்டுக்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படும். 'விவிபேட்' சீட்டுக்கும், 'கன்ரோல் யூனிட்' ஓட்டுக்கும் வித்யாசம் இருப்பின், 'விவி பேட்' இயந்திரத்தில் சேகரிக்கப்பட்ட சீட்டுகளின் எண்ணிக்கையை இறுதியான எண்ணிக்கையாக எடுத்துக்கொள்ளப்படும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.