துார்வாருங்கள் முன்னே... நீர் பெருகட்டும் பின்னே!
திருப்பூர்: கிராமங்களிலுள்ள, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளின், நீர் வழித்தடத்தை பருவமழைக்கு முன், துார்வார ஊராட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில், குளங்கள் உள்ளன. ஒன்றிய மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில், இக்குளங்கள் பராமரிக்கப்படுகின்றன.அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம குளங்களில், மழை நீரை சேகரிக்க, படித்துறையுடன் கூடிய நீச்சல் குளம் போன்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது.மழைக்காலத்தில், குளங்களுக்கு கிடைக்கும் நீர் வரத்து வாயிலாக, படித்துறை கட்டமைப்புகளிலும் தண்ணீர் தேங்கியது.அதிக ஆழத்துடன் குழி அமைக்கப்பட்டு, சுற்றிலும், சுவர்கள் அமைக்கப்பட்டிருந்ததால், இக்கட்டமைப்பில், பல மாதங்களுக்கு தண்ணீர் தேங்கியது.இதை கால்நடைகளின் குடிநீர் தேவைக்கும், துணி துவைத்தல் உட்பட பணிகளுக்கும் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், குளங்களுக்கு, கிராம குடியிருப்புகளில் இருந்து, தண்ணீர் வரும், நீர் வழித்தடங்கள் அனைத்தும், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போயுள்ளன.முறையாக துார்வாரப்படாமல், பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளால், நீர் வழித்தடங்கள் அனைத்தும் அடைபட்டுள்ளன. இதனால், நீர் தேங்காத நிலை ஏற்படுகிறது.இதனால், கடந்தாண்டு, வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தும், குளங்களுக்கும், அதிலுள்ள கட்டமைப்புகளுக்கும், நீர் வரத்து கிடைக்கவில்லை. இதனால், குடிநீர் பிரச்னையும், விவசாயமும் பாதிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.இந்நிலையில், வரும், தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கும் முன், நீர் வழித்தடங்களை, ஊராட்சி நிர்வாகத்தினர் துார்வாரி, பராமரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இது தொடர்பாக, தமிழக அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.