மார்க்கெட் வியாபாரிகள் மேயருடன் சந்திப்பு
திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான தினசரி மார்க்கெட் வளாகம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், 30 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.இந்த மார்க்கெட் கடைகள், திறக்கப்பட்டு வியாபாரிகள் பயன்பாட்டுக்கு ஏலம் விடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை, மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் தங்கமுத்து தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் சில வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமாரைச் சந்தித்துப் பேசினர்.இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:வியாபாரிகள் தரப்பில், மார்க்கெட் கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், இதற்கு முன் கடை நடத்திய வியாபாரிகளுக்கு இதில் முன்னுரிமை வழங்க வேண்டும்; வியாபாரிகள் தரப்பில் சுட்டிக்காட்டிய திருத்தம் மற்றும் மாற்றங்களை மார்க்கெட் வளாகத்தில் மேற்கொள்ள வேண்டும், என்ற கோரிக்கைகள முன் வைத்தோம்.இது குறித்த மாநகராட்சியின் நடைமுறைகள், மேயர் மற்றும் கமிஷனருக்கு உள்ள அதிகாரங்கள் குறித்த ஆதாரங்களையும் அவரிடம் வழங்கியுள்ளோம். உரிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்; விரைவில் பணிகள் முடித்து கடைகள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு செய்யப்படும் என மேயர் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.