வாகனங்கள் தாறுமாறு பார்க்கிங் ஈஸ்வரன் கோவில் பகுதியில் நெருக்கடி
திருப்பூர்;திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், வீரராகவப் பெருமாள் ஆகிய இரு பிரசித்தி பெற்ற கோவில்களும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. கோவில்களுக்கும் தினமும் அதிகளவிலான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இரு கோவில்கள் அமைந்துள்ள வீதிகளை சுற்றிலும் முக்கியமான வர்த்தகப் பகுதியாக உள்ளது. நான்கு ரத வீதிகளிலும் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. பழனியம்மாள் பள்ளி, கே.எஸ்.சி., பள்ளி, முத்துப்புதுார் நடுநிலைப்பள்ளி, நொய்யல் வீதி பள்ளி உள்ளிட்ட பள்ளிகளும் சுற்றுப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால், இந்த கோவில்கள் அமைந்துள்ள ரோடுகள் மட்டுமின்றி அணுகு சாலையாக உள்ள பகுதிகளும் கடுமையான வாகனப் போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடைவீதிக்கு வருவோர் தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இவ்வாறு வாகனங்கள் தாறுமாறாக ரோடு குறுகலாகி மற்ற வாகனங்கள் செல்வதில் சிரமம் நிலவுகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் அவதிப்படுகின்றனர். பெரும்பாலான நேரங்களில் இந்த ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திண்டாடும் நிலை உள்ளது. இந்த ரோடுகளில் வாகன பார்க்கிங் முறையாக பின்பற்றவும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையிலும், போலீசார் நடவடிக்கை எடுப்பதோடு, கண்காணிக்கவும் வேண்டும்.