ரிப்போர்ட்டர் லீக்ஸ்
போட்டி நடத்தறது ஓவர் ரிஸ்க்குங்க!
உடுமலை வட்டாரத்தில், பரப்பரபாக நடக்கும் குறுமைய போட்டி செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அங்கு, உடற்கல்வி ஆசிரியர்கள் இருவர் விளையாட்டு உபகரணங்கள் மாயமாகும் கதையை புலம்பிக்கொண்டிருந்தனர். என்ன நடந்தது சார், புரியும்படி சொல்லுங்க... என, விசாரித்தேன்.குறுமைய விளையாட்டு போட்டி இறுதிக்கட்டத்துக்கு போய்ட்டு இருக்கு. அடுத்ததாக தடகளப்போட்டி நடத்தணும். இந்த முறை, தடகள போட்டி அமராவதி நகர் சைனிக் பள்ளியில தான் நடக்குது.எப்போதும் அரசு கலைக்கல்லுாரில தான் தடகளப்போட்டிகள் நடக்கும். இந்த முறை இடத்தை மாற்றயது ஏன் தெரியுமா? என, கேள்வி கேட்டு, அவரே பதிலையும் தொடர்ந்தார்.கடந்தாண்டு தடகளப்போட்டி அரசு கலை கல்லுாரில நடத்தி முடிச்சிட்டு பார்த்தா, நிறைய விளையாட்டு உபகரணங்கள் காணாம போயிருச்சு. அதுக்கு தனியா கல்லுாரி நிர்வாகத்துக்கு தொகை செலுத்த வேண்டியதா போச்சு.அதுதான் இந்த முறை ஆளை விடுங்க சாமின்னு எல்லாரும் எஸ்கேப் ஆயிட்டாங்க. போட்டி நடத்தறது ஒன்னும், விளையாட்டுதனமான விஷயம் இல்லை, என, கூறினார். தொகுதி மேல வைச்சுட்டாருங்க கண்ணு!
'மக்களுடன் முதல்வர்' முகாமுக்கு கலெக்டர், அமைச்சர் வராட்டியும், மாநகராட்சி மக்கள் பிரதிநிதி தவறாக கலந்துக்கறாரு. இதென்ன டிரென்ட்ன்னு தெரியல, என, உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, உடன்பிறப்புகள் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர்.'மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த கவர்மென்ட் நிதி ஒதுக்குது; நம்ம ஆட்சிதானே நடக்குதுன்னு, நம்ம உடன்பிறப்புக எல்லாம் முகாமுல, முன்னிலையில நிக்கறாங்க. வர்ற லோக்கல் எலக்சனுக்கு மக்கள் முன்னாடி நின்னுதானே ஆகணும்.அதெல்லாம் சரி, உடுமலையை சுத்தி எங்க முகாம் நடந்தாலும், கலெக்டர், அமைச்சரு, ஒன்றியம்னு யாரு வராட்டியும், திருப்பூர் மாநகராட்சி மக்கள் பிரதிநிதியும், தாராபுரத்துக்காரருமான பத்மநாபன் தவறாம வந்திருறாரு.அட இது கூட தெரியலையா; அவரு கட்சி மாவட்ட செயலாளராக இருக்குறாரு; அடுத்த எலக்சன்ல உடுமலை சட்டசபை தொகுதியை குறி வைச்சு இருக்காரு. அதனால, எந்த பங்ஷன் நடந்தாலும், தலையை காட்டுறாரு. இதுல உள்ளூர் நிர்வாகிகளுக்கு கொஞ்சம் கடுப்புதான். இருந்தாலும் வெளிக்காட்டறது இல்லை. இந்தவாட்டியும் தாராபுரத்து காரங்களுக்கு தொகுதியை தாரை வார்த்தா நம்ம நிலை அவ்ளோதான், என கூறி, அங்கிருந்து நகர்ந்தனர். கூட்டுறவு துறை நிலம் ஸ்வாகா!
வால்பாறையில ஆயிரம் பிரச்னை இருக்கு, ஆனாலும் அதிகாரிக கண்டுக்கவே மாட்டீங்கறாங்கனு டீ கடையில் இருவர் பேசிக்கொண்டனர். என்ன விஷயம்னு கவனித்தேன்.வால்பாறை நகர் கோ-ஆப்ரெடிவ் காலனியில, சிந்தாமணி நிர்வாகத்துக்கு சொந்தமான, 26 சென்ட் இடம் இருக்கு. அங்க, ரேஷன் கடை செயல்படுது. அதுல, 10 சென்ட் இடத்தை சிலர் ஆக்கிரமிச்சு வீடு கட்டியிருக்காங்க.கடந்த மாசம் வால்பாறைக்கு வந்த, கோவை மாவட்ட கூட்டுறவு துறை மண்டல இணைப்பதிவாளர் அழகிரி, அந்த இடத்தை நேரில் ஆய்வு செஞ்சாரு. அப்ப, கூட்டுறவு துறைக்கு சொந்தமான இடத்த ஆக்கிரமிப்பு செய்திருப்பத கண்டு பிடிச்சாரு.வருவாய்த்துறையினர் வாயிலாக, விரைவில் ஆக்கிரமிப்பு இடத்தை அளக்க போறாங்க. இதற்கான நடவடிக்கையில வால்பாறை கூட்டுறவு துறை ஊழியர்கள் தீவிரமாக இறங்கியிருக்காங்க. இதனால, ஆக்கிரமிப்பாளர்கள் கலங்கி போயிருக்காங்க, என, பேசிக்கிட்டாங்க. தேர்தலுக்காக வேலை செய்யுறாங்க!
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்டில் நண்பருடன் நின்றிருந்தேன். அங்கிருந்த கடைக்காரர்கள் இருவர், 'ரெண்டு நாளா நம்ம ஏரியா பளிச்சுனும், 'பவர் கட்' இல்லாமயும் இருந்துச்சு. இப்ப, மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறின மாதிரி ஆயிருச்சு,' பேசிக்கிட்டு இருந்தாங்க.என்ன விஷயம்னு கவனித்தேன். 'போன, வியாழன், வெள்ளிக்கிழமையில, 'உங்களை தேடி, உங்கள் ஊரில்'னு அரசு முகாம் நடத்தினாங்க. கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதில மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் ரெண்டு நாள் ஆய்வு பண்ணினாரு. எல்லா அரசு அலுவலகம், பள்ளிக்கூடம், சத்துணவு மையம், அங்கன்வாடி மையம்னு எல்லா இடத்தையும் பார்வையிட்டாரு.எல்லா துறை அதிகாரிகளுக்கும் கூட்டம் நடத்தி, வளர்ச்சி பணிகள், அரசாங்கத்தோட திட்டத்த எந்த தடையும் இல்லாம மக்களுக்கு கொண்டு சேர்க்கணும்னு ஏகப்பட்ட 'அட்வைஸ்' பண்ணியருக்காரு.மக்களிடம் அரசாங்கத்துக்கு நல்ல பெயர் கிடைக்கணும், சட்டசபை தேர்தல்ல எல்லா தொகுதியிலும் ஜெயிக்கணும்னு, அதிகாரிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்திருக்காங்க.கலெக்டர் ஆய்வு பணி நடந்ததால, பேரூராட்சி பகுதியில 'பவர் கட்' ஆகல. ஆய்வு முடிச்சு கலெக்டர் கிளம்பினதும், வழக்கம் போல 'பவர் கட்' ஆரம்பிச்சாச்சு. இப்படி இருந்தா, எப்படி நல்ல பேரு கிடைக்கும், என, பேசிக்கிட்டாங்க. இப்படி இருந்தா... பஸ் எப்படி இருக்கும்!
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, 'பிரேக் டவுன்' ஆகி நின்ற அரசு பஸ்சை, ஊழியர்களும், பொதுமக்களும் தள்ளி 'ஸ்டார்ட்' செய்தனர். அதை கண்ட, அரசு பஸ் ஊழியர்கள், 'இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே ஓட்டுவது,' என, புலம்பினர். என்ன பிரச்னைனு அவங்க கிட்ட விசாரிச்சேன்.அரசு போக்குவரத்து கழகத்துக்கு, பொள்ளாச்சியில மூன்று பணிமனைகள் இருக்கு. அதிகப்படியான 'மப்சல்' பஸ்களும், டவுன் பஸ்களும் இயக்கப்படுது. வழித்தட ஊர்களுக்கு சென்று திரும்பும் பஸ்களை பணிமனையில நிறுத்தும் போது, பஸ்ல என்ன பிரச்னைனு பராமரிப்பு புத்தகத்துல டிரைவர்கள் எழுதி வைக்கிறாங்க.ஆனா, பழுது சரி செய்யறதுக்கான 'ஸ்பேர் பார்ட்ஸ்' உடனுக்குடன் வாங்கறது கிடையாது. பஸ் எண்ணை குறிப்பிட்டு, ெஹட் ஆபீஸ்ல இருந்து அப்ரூவல் வந்த பிறகே, பழுது சரி செய்யப்படும்னு சொல்லறாங்க.ஒரு பணிமனையில, 58 பஸ்கள் இருந்தாலும், இன்ஜின் ஆயில் 'டாப் அப்' செய்ய தினமும் ஒரு லிட்டர் மட்டுமே அனுமதிக்கப்படும்னு உத்தரவு போட்டிருக்காங்க. என்ன பண்ணறதுனு தெரியாம டிரைவர்கள் எல்லாரும் அதிர்ச்சியில இருக்காங்க. அரசு பஸ்ச நம்பி வர்ற பயணியரை பாதுகாப்பா இறக்கி விடணும்னு, யாருமே நினைக்கறதில்லனு சொன்னாங்க. பிளாஸ்டிக் இல்லா ஊரை உருவாக்குவோம்!
பொள்ளாச்சி நகராட்சியில், பிளாஸ்டிக் பயன்பாடு, தொழில் உரிமம் குறித்து கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.நகராட்சி கமிஷனர் பேசும்பாது, பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என உறுதி எடுக்கலாம். தடை செய்யப்பட்டது, அனுமதி அளித்தது என பிரிக்காமல், அனைத்து வகை பிளாஸ்டிக்கையும் பயன்படுத்தாவிட்டால் ஊர் துாய்மையாக இருக்கும். வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்தாவிட்டால் ஊருக்கு நன்மை ஏற்படும்.எனது மொபைல்போனுக்கு கூட நான் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவதில்லை. இங்க் பேனாதான் பயன்படுத்துகிறேன் என விளக்கமளித்து, பேசினார்.அந்த நேரத்தில், பிளாஸ்டிக் பாட்டிலில் குடிநீர் தருவதை கண்ட வியாபாரி ஒருவர், இந்த கூட்டத்திலேயே பிளாஸ்டிக் பாட்டிலில் தான் தண்ணீர் கொடுக்கறீங்க. இதை எப்படி தவிர்க்க முடியும்,' என கேள்வி எழுப்பினார்.அதற்கு, 'தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை அனுமதித்தேன். அடுத்த முறை நடக்கும் கூட்டத்தில் இதற்கு மாற்றாக என்ன செய்ய முடியும் என நிச்சயம் யோசிப்பேன்,' என கமிஷனர் பதிலடி கொடுத்தார்.
பி.ஏ.பி., நீர் திருட்டு; அரசியலால் அதிகாரிகள் மவுனம்!
உடுமலை - கொழுமம் ரோட்டில் விவசாயிகள் புலம்பியபடி நின்றிருந்தனர். எதிர்காலத்துல பி.ஏ.பி., பாசனம் என்னாகுமோ என, புலம்பிக் கொண்டிருந்தனர்.அவர்களிடம் பேசியபோது, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்திருக்காங்க. நீர் பற்றாக்குறையை காரணமா சொல்லி, நாலு சுற்று தண்ணீர் கொடுப்பதா சொல்றாங்க. உடுமலை பக்கத்துல இருக்கற மருள்பட்டி குளத்துக்கு, கால்வாயில இருந்து நேரடியாக மடை அமைத்து நீர் திருடுறாங்க.கடை மடையில இருக்கற விவசாயிக தண்ணீரின்றி தவிக்கறாங்க. அதிகாரிக கிட்ட புகார் செய்தாலும், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி முக்கிய புள்ளிகள், அதிகாரிகளை அழைத்து மிரட்டுறாங்களாம். எதிர்த்து கேள்வி கேட்கற விவசாயிகள அடித்து துவம்சம் பண்ணுறாங்க.ஏற்கனவே, முதலாம் மண்டல பாசனத்துக்கு ரெண்டு சுற்று தான் தண்ணீர் கொடுத்தாங்க. இப்ப, 2ம் மண்டலத்துக்கு நீர் திறந்த ஒரு சில நாட்களிலேயே பகிரங்கமாக குளத்திற்கு தண்ணீர் திருடுறாங்க. கால்வாய் கரையிலுள்ள விவசாய கிணறுகளின் மின் இணைப்பை துண்டிக்கும் அதிகாரிகள், வெளிப்படையாக திருட்டு நடந்தாலும் கண்டுக்காம இருக்கறாங்க.வருவாய்த்துறை, மின் வாரியம், நீர் வளத்துறை, போலீசாரை கொண்ட கண்காணிப்பு குழுவும் செயல்படுவதில்ல. உயர் அதிகாரிகள் முதல் உள்ளூர் அதிகாரிகள் வரை கைகட்டி வேடிக்கை தான் பார்க்கறாங்க. அரசியல் செல்வாக்கு இருந்தா, பாசன நீரை எப்படி வேணும்னாலும் திருடலாம் போலிருக்கு, என, கூறிய படி நகர்ந்தனர்.