உடுமலை:உடுமலை நகராட்சியில், மூன்று மதத்தினருக்கும் நிலம் ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.உடுமலை நகராட்சி, பொள்ளாச்சி ரோட்டில், 1926ம் ஆண்டு முதல், நகராட்சிக்கு சொந்தமான நிலம் உள்ளது. அக்காலத்தில், நகராட்சி துாய்மைப்பணியாளர்கள் வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு நகர பகுதியில், வீடுகள் கட்டி வழங்கப்பட்டது.நகர பகுதியில் இருந்த மயானம் மாற்றப்பட்டது. சுற்றுச்சுவர், காத்திருப்பு அறை, மின் விளக்கு, போர்வெல் வசதிகள் செய்யப்பட்ட நிலையில், 2006ல், எரிவாயு மயானம் அமைக்கப்பட்டது.தொடர்ந்து நகராட்சி பராமரிக்காத நிலையில், தற்போது, இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள் என மூன்று மதத்தினருக்கும், இடம் ஒதுக்க நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.முன்னாள் நகராட்சி தலைவர் வேலுசாமி கொண்டு வந்த தீர்மானம்: 2006ல், நகராட்சி தலைவராக இருந்த போது, எரிவாயு மயானம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது நகர வளர்ச்சி காரணமாக, மேற்படி மயானத்தில் மீண்டும் பிரேதங்கள் புதைக்கப்பட்டு வருகின்றன.எனவே, சுற்றுச்சுவர், காத்திருப்பு அறை ஆகியவற்றை புதுப்பிக்கவும், பிரதான ரோட்டிலிருந்து வழித்தடம் சீரமைக்க வேண்டும்.மூன்று சர்வே எண்களில் அமைந்துள்ள இந்த நிலத்தில், ஒரு பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமியர் மயானத்திற்கு சுற்றுச்சுவரும், மற்றொரு சர்வே எண்ணில் உள்ள நிலத்தின் ஒரு பகுதியை கிறிஸ்துவர்கள் மயானம் அமைக்கவும் ஒதுக்க வேண்டும்.இந்த தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஆதரித்ததால், நேற்றைய நகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.