அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்
திருப்பூர்; திருப்பூரில் அனைத்து துறை அலுவலர்களுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்றார்.சட்டசபை கூட்ட தொடர் மானிய கோரிக்கையில் திருப்பூர் மாவட்டத்துக்கு அறிவிப்புகளாக வெளியிட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதங்கள் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை வகித்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.இதில், பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக, நீர்வளத்துறையின் சார்பில், வட்டமலைகரை ஓடை நீர்தேக்க திட்டத்துக்கு அமராவதி ஆற்றில் இருந்து நீர் கொண்டு வரும் திட்டம், கணபதிபாளையம் மற்றும் கத்தாங்கண்ணி கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளுக்கு கத்தாங்கண்ணி கிராமம் நொய்யல் ஆற்றின் மழைகால உபரிநீரை நீரேற்று முறையில் கொண்டு செல்லுதல், 1,252 ஊரக குடியிருப்புகளுக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டம் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.