உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேலை உறுதி திட்டத்தில் நாற்று நர்சரி; மத்திய குழுவினர் விரைவில் ஆய்வு

வேலை உறுதி திட்டத்தில் நாற்று நர்சரி; மத்திய குழுவினர் விரைவில் ஆய்வு

திருப்பூர்; 'வருங்கால தலைமுறைக்கு சுத்தமான காற்று, நீர் உள்ளிட்ட மாசுபடாத சுற்றுச்சூழலை விட்டுச்செல்ல வேண்டியது அவசியம்' என்ற நிலையில், கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாற்று நர்சரி நடவு செய்ய, மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிப்பு வழங்கி வருகின்றன.ஒவ்வொரு வட்டார அளவிலும், ஒவ்வொரு கிராம ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு, நாற்று நர்சரி அமைக்கவும், பனை விதை உட்பட மண்ணுக்கேற்ற பலவகை மரக்கன்று, விதை உற்பத்தி செய்து, அந்தந்த வட்டாரத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளுக்கும் வினியோகிக்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. மரக்கன்று பெற்ற ஊராட்சிகள், குளம், குட்டை கரையோரம் மற்றும் வாய்ப்புள்ள இடங்களில் அவற்றை நட்டு, வளர்த்து, பசுமை போர்வையை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், தேசிய ஊரக வேலைவாய்ப்ப உறுதியளிப்புத்திட்ட செயல்பாடுகளை, மத்திய அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகளை உறுதி செய்து வருகின்றனர். அதன்படி, நாற்று நர்சரியை ஆய்வு செய்யவும், மத்திய குழு திட்டமிட்டுள்ளது. எனவே, நர்சரி பராமரிக்கும் ஊராட்சி நிர்வாகத்தினர் தயார் நிலையில் இருக்குமாறு, ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.ஊராட்சி நிர்வாகத்தினர் சிலர் கூறுகையில், 'கிராம ஊராட்சிகளில், பல நர்சர்களில் மரக்கன்று நடும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. சில ஊராட்சிகளில் பெயரளவுக்கு மட்டுமே நடக்கிறது. சிறப்பாக செயல்படும் நர்சரிகளை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை