வேகத்தடை அறிய வர்ணம் பூச்சு; நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
உடுமலை : மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், விபத்துகளை தவிர்க்க வேகத்தடைகளில் வர்ணம் பூசுதல், எச்சரிக்கை பலகை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மடத்துக்குளம் பகுதியில், ரோடுகளில் வாகனங்கள் வேகமாக செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ், 48 கி.மீ., மாநில நெடுஞ்சாலை; மாவட்ட முக்கிய ரோடு 52; மாவட்ட இதர சாலை 187; கரும்பு அபிவிருத்தி திட்ட சாலை 68 கி.மீ., தொலைவுக்கு பராமரிக்கப்படுகிறது.இந்த ரோடுகளில், அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களால், விபத்துகளை தவிர்க்க குறிப்பிட்ட பகுதிகளில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.இதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதிகளில், புதிதாக மற்றும் ஏற்கனவே அமைக்கப்பட்ட வேகத்தடைகள் இருப்பது வாகன ஓட்டுநர்களுக்கு தெரியும் வகையில், மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், வேகத்தடை பகுதியில் வர்ணம் பூசுதல் மற்றும் அவ்விடங்களில் எச்சரிக்கை பலகை பொருத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.