உடுமலை;உடுமலையில், இயற்கை ஓடை முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.உடுமலையின் மேற்கு பகுதி கிராமங்களில் பெய்யும் மழை நீர், சிறு, சிறு ஓடைகளாக உருவாகி, முக்கோணம் அருகேயுள்ள ஒடையில் கலக்கிறது.ஆழமாகவும், அகலமாகவும் அமைந்திருந்த இந்த ஓடை, முக்கோணம், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை கடந்து, கணபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று, ராஜவாய்க்காலில் கலக்கிறது.ஒரு காலத்தில் மிகப்பெரிய ஓடையாக காணப்பட்ட முக்கோணம் ஓடை, ஆக்கிரமிப்புகளால், குறுகலாக மாறியுள்ளது.அதோடு, ஏறத்தாழ, 10 கி.மீ., நீளம் அமைந்துள்ள ஓடை வழித்தடம் பெரும்பாலும் அழிக்கப்பட்டு, விவசாய நிலங்களாகவும், வணிக மனைகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. ராஜவாய்க்கால் மற்றும் ஓடை சேரும் பகுதி முழுவதும் மாயமாகியுள்ளது.அதோடு, இயற்கை வெள்ள நீர் வடிகாலாக இருந்த ஓடை, முறையாக பாரமரிக்கப்படாததால், முட்செடிகள், கொடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது.முக்கோணம் பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் பிளாஸ்டிக், டயர், பாட்டில், துணி உள்ளிட்ட கழிவுகள் மற்றும் குப்பை கொட்டப்பட்டு, குப்பை கிடங்காக மாற்றப்பட்டுள்ளது.இதனால், மழை காலங்களில் மழை வெள்ள நீர் வடிய வழியின்றி, முக்கோணம், பூலாங்கிணர் பகுதியிலுள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து வருகிறது.மேலும், கணபதிபாளையம் ரோடு மற்றும் அப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் குளம்போல் தேங்கி வருகிறது.மேலும், உடுமலை நகரின் மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள், பெதப்பம்பட்டி ரோடு, ஏரிப்பாளையம், புக்குளம் வரையிலான விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.இதனால், ஒவ்வொரு மழைக்காலத்திலும், பல்வேறு கிராம மக்களும், பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் உள்ள பயிர்களும் பாதித்து வருகின்றன.இயற்கை நீர் வழித்தடமான ஓடை அடையாளத்தை இழந்துள்ளதால், பல்வேறு கிராம மக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஓடையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆவணங்கள் அடிப்படையில், அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகள் மற்றும் ஓடையை அழித்து, விவசாய நிலங்களாக மாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முழுமையாக ஓடையை மீட்கவும் வேண்டும்.