மேலும் செய்திகள்
பொது கழிப்பிடம் இல்லை; கிராம மக்களுக்கு அவதி
30-Aug-2024
அனுப்பர்பாளையம்: -திருப்பூர் மாநகராட்சி, 10 வது வார்டு, ஆத்துப்பாளையம் திருவள்ளுவர் நகரில் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டணமில்லா பொது கழிப்பிடம் கட்ட 24.96 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆக., மாதம் 22ம் தேதி பூமி பூஜை நடத்தப்பட்டு, பணி தொடங்கப்பட்டது.கட்டடப்பணி அனைத்தும் முடிவடைந்து விட்டது. தண்ணீர் வசதி ஏற்படுத்த வில்லை. தண்ணீர் வசதி இல்லாததால், பணி முடிந்து, பல மாதங்களாகியும் பொது கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரமுடியாமல் உள்ளது.இதனால் இப்பகுதி பொதுமக்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். அதுபோல், ஆத்துப்பாளையம் சவுபாக்கியா நகர் முதல் மாரியம்மன் கோவில் முதல் வீதி வரை சாக்கடை கால்வாய் கட்ட மாநகராட்சி சார்பில், பொது நிதியின் மூலம் 19.90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிக்கான பூமி பூஜை கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி நடைபெற்றது. பூமி பூஜை நடத்தப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை பணி தொடங்கப்படவில்லை. கிடப்பில் போட்டுள்ளனர்.வார்டு கவுன்சிலர் பிரேமலதா, கூறியதாவது:பொது கழிப்பிடத்திற்கு போர் போட்டு, தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் வசதி இல்லாமல் பூட்டி கிடக்கிறது. சாக்கடை கால்வாய் நிதி ஒதுக்கீடு பல மாதங்களாகியும் பணி தொடங்கப் படாமல் உள்ளது.பணியை முடித்து கொடுக்ககூறி பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகளின் மெத்தன போக்கால், பொது மக்களிடம் பதில் கூற முடியாமல் திணறி வருகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
30-Aug-2024