ரயில் பயணிகள் நிம்மதி
கோவை மாவட்டம், இருகூர் - போத்தனுார் வழித்தடத்தில் துவங்கப்பட்ட தண்டவாளப்பராமரிப்பு பணியால், ஆக., 16ம் தேதி, திருச்சி - பாலக்காடு டவுன் பாசஞ்சர் (எண்:16843) இயக்கம் குறைக்கப்பட்டது. சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் செல்லாமல், போத்தனுார் வழியாக, பாலக்காடு செல்லுமென அறிவிக்கப்பட்டது. ரயிலின் சேவை குறைப்பு, கடந்த, ஆக., 31ம் தேதியுடன் முடிவடைந்தது. நேற்று, திருச்சியில் புறப்பட்ட ரயில் திருப்பூர் கடந்து, கோவை வழியாக பாலக்காடு சென்றது. இந்த ரயிலில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர். ரயில் கோவை செல்லாததால், ஈரோடு, திருப்பூருக்கு பணிக்கு வருபவர்கள் இருகூர் அல்லது போத்தனுாரில் இறங்கி, கோவை சென்றனர். தற்போது ரயில் இயக்கம் சீரடைந்துள்ளதால், பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.