| ADDED : ஆக 04, 2024 11:15 PM
பொங்கலுார் : கடந்த பிப்ரவரி மாதம் பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் போதிய தண்ணீர் இருப்பு இல்லாததால் ஐந்து சுற்றுக்கு பதிலாக இரண்டரை சுற்று தண்ணீர் விடுவது என முடிவு செய்யப்பட்டது.இரண்டு சுற்றுப்பாசனம் நிறைவடைந்த நிலையில் தண்ணீர் தீர்ந்து விட்டதாக கூறி பாசன நாட்கள் குறைக்கப்பட்டது. இரண்டு சுற்றுடன் பாசனம் முடிக்கப்பட்டது. தற்போது பி.ஏ.பி., நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வெள்ளம் கரை புரள்கிறது. நீண்ட இழுபறிக்குப் பின் காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வரும் 16ல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது.இந்த ஆண்டு பி.ஏ.பி., பாசனம் நடக்கும் பல்லடம், பொங்கலுார், காங்கயம், வெள்ளகோவில் உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை போதுமான அளவு பெய்யவில்லை. இதனால் கடும் வறட்சி நிலவுகிறது. சில இடங்களில் குடிப்பதற்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இரண்டாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன் பாக்கியுள்ள அரை சுற்றுத் தண்ணீரை முதல் மண்டல பாசனத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.