மாணவியர் பாதுகாப்பு 10 அறிவுரைகள்
தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பது முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு, உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக 'அகல் விளக்கு' திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை இணையதளப் பாதுகாப்பு வழிகாட்டி சிற்றேட்டை வெளியிட்டுள்ளது. அதில், இணையதளத்தில் பாதுகாப்பாக இருக்க மாணவியருக்கான 10 அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள பத்து கட்டளைகள்: 1. பெயர், முகவரி, மொபைல் எண், பள்ளியின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை இணையதளத்தில் ஒருபோதும் பகிரக்கூடாது. 2. எளிதில் யூகிக்க முடியாத வலிமையான பாஸ்வேர்டை பயன்படுத்த வேண்டும். இதை யாருடனும் எக்காரணத்தைக் கொண்டும் பகிரக்கூடாது. 3. பாடங்களில் சந்தேகம் கேட்பது போல, பிரச்னைகள் வந்தால், உடனடியாக ஆசிரியர்களிடம், அதுகுறித்து பகிர்வதற்கு முன் வர வேண்டும். 4. அறிமுகம் இல்லாத சந்தேகத்திற்குரிய நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்டவற்றில் வரும் இணைப்புகளை ஒருபோதும் 'க்ளிக்' செய்யக்கூடாது. 5. யாரேனும் இணைய தளத்தின் வழியாக துன்புறுத்தினால், உடனடியாக பெற்றோரிடமோ, ஆசிரியர்களிடமோ மனம் விட்டு பேசி, பயத்தை போக்கி அது குறித்து புகார் செய்ய வேண்டும். 6. இணையதளத்தில் யாரேனும் துன்புறுத்தி, விருப்பத்துக்கு மாறாக நடந்து கொண்டால் உடனடியாக அவர்களுடைய எண்களை பிளாக் செய்து, ரிப்போர்ட் செய்ய வேண்டும். 7. மாணவியர் போட்டோவை மார்பிங் செய்தோ; தவறான நோக்கத்துடனோ பரப்பினால், அதுகுறித்து சட்டரீதியாக உடனடியாக புகார் செய்யலாம். 8. சைபர் குற்றங்கள் குறித்து, 1930 என்ற எண்ணில் புகார் செய்யலாம். 9. கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் நம்பகமான ஆன்டி வைரஸ் மென்பொருளை பயன்படுத்த வேண்டும். 10. இணைய வழி பயன்பாட்டு நேரத்துக்கு என கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டு, அதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அகல் விளக்கு தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்காக செயல்படுத்தப்படும் 'அகல்விளக்கு' திட்டத்துக்காக குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இக்குழுவில் ஆசிரியைகள், மாணவிகள் இடம் பெறுகின்றனர். மாணவிகளுக்கு உடல், மனம் மற்றும் சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகள் நேரடியாகவும், மொபைல்போன் பயன்படுத்துவதன் மூலம் இணையதளம் வாயிலாகவும் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்னைகளில் இருந்து விடுபட முடியாமல் சிலர் தவறான முடிவையும் எடுத்து விடுகின்றனர். இது, கல்வியிலும், குடும்பத்தினருக்கு பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது. இவற்றில் இருந்து மாணவிகள் தங்களை மீட்டு பாதுகாத்துக் கொள்வதற்காக 'அகல் விளக்கு' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.