லஞ்ச அதிகாரிக்கு 3 ஆண்டு சிறைவாசம்
திருப்பூர் ; லஞ்சம் பெற்ற வணிக வரி அதிகாரிக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருப்பூர் கோர்ட் உத்தரவிட்டது.பல்லடத்தை சேர்ந்தவர் செல்வமணி, 46. பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரம் செய்து வந்தார். தன் சகோதரி பெயரில், பனியன் வேஸ்ட் குடோன் துவங்க ஏற்பாடு செய்தார். மத்திய விற்பனை வரி எண் (சி.எஸ்.டி.,) பெற, பல்லடம் வணிகவரித்துறை அலுவலகத்தில், கடந்த, 2010ல், செல்வமணி விண்ணப்பித்தார். வணிகவரி உதவி அதிகாரியாக பணியாற்றிய சேமகுமார், 55, சி.எஸ்.டி., எண் வழங்க, 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.செல்வமணி, திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவிக்க, சேமகுமார் லஞ்சம் பெறும் போது, போலீசாரிடம் பிடிபட்டார். இவ்வழக்கு விசாரணை, திருப்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. சேமகுமாருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை, 4,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி செல்லதுரை தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜாரானார்.