திருப்பூர் அரசு மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்து ஆவேசம்
திருப்பூர்: மதுரை, மேலுாரைச் சேர்ந்தவர் செல்வக்குமார், 35. கூலி தொழிலாளி. இவர் மனைவி சுக்ரிதா, 32. தம்பதிக்கு எட்டு வயதில் மகள் உள்ளார். இவர்கள் தற்போது, புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தங்கியுள்ளனர். தற்போது கர்ப்பிணியாக உள்ள சுக்ரிதாவுக்கு கடந்த இரு நாள் முன் வயிற்று வலி ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்த மருத்துவர்கள், கர்ப்பப்பையில் நீர் குறைவாக உள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கருவைக் கலைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான செல்வக்குமார், மருத்துவமனையின் முன்பகுதியில் வரவேற்பறையில் இருந்த கண்ணாடியைஉடைத்தார். தகவலின் பேரில், தெற்கு போலீசார் மருத்துவமனைக்கு சென்று, செல்வகுமாரை கைது செய்தனர். இதனால், மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.