உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிய துல்லியக் கருவி

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புற்றுநோய் கண்டறிய துல்லியக் கருவி

- நமது நிருபர் -திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், 'நமக்கு நாமே' திட்டத்தில், புற்றுநோய் கண்டறியும் மையம் அமைய உள்ளது.இதன் வாயிலாக, 'லினாக்' எனப்படும் அதிநவீன புற்றுநோய் கதிர்வீச்சு சாதனமும், சிகிச்சை கட்டமைப்பும் வர உள்ளது. இந்நிலையில், 'பெட் ஸ்கேன்' கருவி நிறுவுவதற்கு திருப்பூர் உகந்ததாக இருக்கும் என, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் குழுவினர் கருதி, இதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டீன் (பொறுப்பு) பத்மினி கூறியதாவது:'பெட் ஸ்கேன்' (பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி) வாயிலாக, உள் உறுப்புகளில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்.வயிற்று வலி பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள், குடல் வால்வு, சிறுநீர்ப்பை, மண்ணீரல், கல்லீரல், பித்தப்பை போன்ற உள்ளுறுப்பு பாதிப்பை கண்டறிய பலர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு வருகின்றனர். சில நோயாளிகளுக்கு உடலில் புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய சி.டி., ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.இவற்றின் வாயிலாக, உடலில் கட்டி இருப்பது தெரியவரும்; அதேபோல் சி.டி., அல்லது எம்.ஆர்.ஐ., ஸ்கேனில் உடல் உறுப்புகளின் அளவு, வடிவம், மாறுபாடுகள் மற்றும் குறைபாடு தெரியும். ஆனால் அந்த உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது.வரவுள்ள 'பெட் ஸ்கேனில்' முக்கிய உடல் உறுப்புகளின் தோற்றத்தைக் காண்பதுடன் அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதை அறிய முடியும். அந்த உறுப்புகளில் கட்டி உள்ளதா, ரத்தம் ஓட்டம் சரியாக உள்ளதா, செல்களில் ஆக்ஸிஜன் கிரகிக்கப்படுகிறதா, செல்களுக்குள் குளுக்கோஸ் சென்று பயனடைகிறதா என்பது போன்ற விவரங்களைத் தெளிவாக தெரிந்துகொள்ள முடியும்.இவ்வாறு, பத்மினி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை